உலக அளவில் நெகட்டிவ் இமேஜ் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாட்டின் உலகளாவிய இமேஜ் தான் அதன் சுற்றுலா, முதலீடுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளைத் தீர்மானிக்கிறது. இந்நிலையில், உலக அளவில் அதிகம் விரும்பப்படும் மற்றும் குறைவாக விரும்பப்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 65 நாடுகளில் 46,000-க்கும் அதிகமானோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது
உலக அரங்கில் ‘கெத்து’ காட்டும் நாடுகள்
சுவிட்சர்லாந்து & கனடா ஆகிய நாடுகள் +36 மதிப்பெண்களுடன் உலக அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஜப்பான் (+34 மதிப்பெண்கள்) மற்றும் ஸ்வீடன் (+33 மதிப்பெண்கள்) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இத்தாலி (+32), நார்வே (+32), ஸ்பெயின் (+31) ஆகிய நாடுகள் டாப் 7 இடங்களுக்குள் வருகின்றன.
ஆஸ்திரேலியா, டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் தலா +30 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. நெதர்லாந்து (+29), அயர்லாந்து (+28), போர்ச்சுகல் (+26), ஆஸ்திரியா (+25) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிரீஸ் (+24), பெல்ஜியம் (+24) ஆகிய நாடுகள் 16 மற்றும் 17-வது இடங்களைப் பிடிக்கின்றன.
ஆசியாவின் முக்கியப் பொருளாதார நாடுகளான சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் ஐரோப்பாவின் ஜெர்மனி ஆகிய நாடுகள் தலா +21 மதிப்பெண்களுடன் டாப் 20 பட்டியலை நிறைவு செய்கின்றன.
உலகிலேயே மிக மோசமான இமேஜ் கொண்ட நாடுகள்
இந்த ஆய்வில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமெரிக்கா பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தபோதிலும், அமெரிக்காவின் நிகர இமேஜ் மதிப்பெண் -16 ஆகக் குறைந்து, கடைசி 5 இடங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா (-2) மற்றும் பாகிஸ்தான் (-9) ஆகிய இரு நாடுகளுமே பாசிட்டிவ் பார்வைகளை விட அதிக நெகட்டிவ் பார்வைகளைப் பெற்றுள்ளன. இதேபோல் நைஜீரியா (-3), ரஷ்யா (-11) மற்றும் சவூதி அரேபியா (-1) ஆகிய நாடுகளும் நெகட்டிவ் இமேஜ் பெற்றுள்ளன.
கடைசி இடத்தில் இஸ்ரேல்
இந்த ஒட்டுமொத்தப் பட்டியலிலேயே உலக அளவில் மிக மோசமான நெகட்டிவ் இமேஜ் கொண்ட நாடாக இஸ்ரேல் (-24) கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. காசா, லெபனான், சிரியா மற்றும் முக்கியமாக ஈரானுடன் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் போர்கள் மற்றும் மோதல்களே உலக மக்களின் பார்வை இஸ்ரேல் மீது இவ்வளவு கடுமையாக மாறக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான இமேஜ் பட்டியலில் இஸ்ரேல் நாடானது, ஆப்கானிஸ்தான் (-19) மற்றும் வடகொரியா (-19) ஆகிய நாடுகளை விடவும் கீழே உள்ளது குறிப்பிடத்தக்கது.
