தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம், தற்போது தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை எட்டியுள்ளது. இந்த ஆதரவுகளின் மூலம் த.வெ.க-வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார்.

திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா காட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் என்றார். வி.சி.க. ஆதரவு தந்ததால் த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்தது. கடிதத்தை பெற்ற ஆதவ் அர்ஜூனா இதனை த.வெ.க. தலைவர் விஜயிடம் வழங்குகிறார். வி.சி.க.வின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கும் த.வெ.க. தலைவர் விஜய், அதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.

த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக ஐ.யூ.எம்.எல் கட்சி அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுக்க முடியாது என நேற்று மறுத்த நிலையில் இன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு நேரில் சென்ற செங்கோட்டையன், இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து ஆதரவு வழங்கி உள்ளது. இதன் மூலம் த.வெ.க ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.