த.வெ.க.வை ஆதரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். த.வெ.க-வை யாரும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்று நான் முன்னதாகவே அனைவருக்கும் எச்சரித்திருந்தேன் என்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள த.வெ.க, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதுடன் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வார கால அவகாசமும் கேட்டுள்ளது.

பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத் தவெக நாடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் தவெக-வை நோக்கித் திரும்பியதே அந்த கட்சியின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம். த.வெ.க தரப்பிலிருந்து தன்னை இதுவரை யாரும் அணுகவில்லை. கட்சியின் பிற நிர்வாகிகளை அவர்கள் தொடர்பு கொண்டார்களா என்பதும் தனக்குத் தெரியாது. இருப்பினும், காங்கிரஸின் பல நிர்வாகிகள் த.வெ.க-வை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.