TVK Vijay: விஜய்யின் பிரசாரங்களுக்கு திரண்ட மக்கள் கூட்டம், யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அவர் ஒரு “கிங் மேக்கராக” உருவெடுப்பாரா அல்லது மற்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் “ஸ்பாய்லராக” இருப்பாரா?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் எதிர்பார்த்திருந்த எக்சிட் போல் (Exit Poll) எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த முடிவுகள் மே 4-ம் தேதி நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஒரு முன்னோட்டமாக அமையும்.
மும்முனைப் போட்டி: விஜய்யின் தாக்கம் என்ன?
தமிழக அரசியல் களம் வழக்கமாக தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த முறை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் பிரசாரங்களுக்கு திரண்ட மக்கள் கூட்டம், யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இதனிடையே, தேர்தல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரியவந்துள்ளது. ஆளும் கட்சியே வெல்லும் என என்டி டிவி – பீபள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், ரிபப்ளிக் – பி மார்க் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2021 தேர்தலை விட இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரியவருகிறது.
