அந்தச் சந்திப்பின்போது முதல்வர் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருந்ததை, “துடைத்துவைத்த ஆப்பிளாய்த் துலங்கினாய் நீ” எனத் தனது கவிதையில் வைரமுத்து வர்ணித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த கவிஞர் வைரமுத்து, தேர்தல் களம் மற்றும் முதல்வரின் தன்னம்பிக்கை குறித்து நெகிழ்ச்சியான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்த மறுநாள், அண்ணா அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்த வைரமுத்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். அந்தச் சந்திப்பின்போது முதல்வர் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருந்ததை, “துடைத்துவைத்த ஆப்பிளாய்த் துலங்கினாய் நீ” எனத் தனது கவிதையில் வைரமுத்து வர்ணித்துள்ளார்.

ஸ்டாலின் கேட்ட ‘அந்த’ ஒரு கேள்வி:

தேர்தல் முடிவுகள் குறித்துப் பலரும் பலவிதமாகக் கணிப்புகளைக் கூறி வரும் வேளையில், முதல்வரின் அணுகுமுறை வியக்க வைத்ததாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். வெற்றிக் கணிப்புகளைச் சொல்ல வந்த வேட்பாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்ட ஒரே கேள்வி:

இரண்டாம் இடம் யாருக்கு?”

இந்த ஒரு கேள்வியிலேயே, முதலிடம் தங்களுக்குத்தான் என்பதில் முதல்வர் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பது தெரிவதாகவும், அந்தத் தன்னம்பிக்கையே வெற்றிக்கான முன்னோட்டம் என்றும் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

கலைஞர் திருமகனே!
காவல் நாயகனே!

வாக்குப்பதிவுக்குப் பின்னை
சந்தித்தேன் நேற்று
அறிவாலயத்தில் உன்னை

உழைப்பின் களைப்பில்லாமல்
துடைத்துவைத்த ஆப்பிளாய்த்
துலங்கினாய் நீ

அச்சார வாழ்த்தாய்ப் 
பொன்னாடை விரித்துப்
போர்த்தினேன்

“உன்
உழைப்பும் சாதனையும்
உன் கனவை நனவாக்கும்”
என்று உரக்கச் சொன்னேன்

வெற்றியில்
விம்முவதும் இல்லை
தோல்வியில்
பம்முவதும் இல்லை
என்ற விவேகச் சொல்லே
வீரனுக்கு அழகு

நீ வெற்றியே பெறுவாய்

கவனித்தேன்
வெற்றி முன்னோட்டம்
சொல்லவந்த வேட்பாளர்களிடம்
நீ கேட்ட ஒரே கேள்வி
‘இரண்டாம் இடம் யாருக்கு?’

அதிலேயே தெறிக்கவிட்டாய்
முதலிடம் உனக்கென்னும்
முடிவை

தனிவலிமை கொண்டாலும்
துணை வலிமையின்
தோள் சேர்ப்பாய்

மண் மொழி மானம் காக்க
மீண்டும்
உதயசூரியனை எழுப்பிவிட்டு
உழைக்கச் செல்வாய்

ஆட்சி – கட்சி
இரண்டையும் பழுதுபார்ப்பாய்

ஆளாளுக்கு
ஒன்று சொல்கிறார்கள்;
நல்லதை மட்டுமே நம்பு

ஆள் சொல்லாததை
நாள் சொல்லும்

அந்த நாள்
‘மே நாலு’ என்னும் 
நல்லநாள்

மண், மொழி, மானம் காக்க மீண்டும் உதயசூரியனை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்துவிட்டு, ஸ்டாலின் மக்கள் பணியைத் தொடர்வார் எனத் தனது கவிதையை வைரமுத்து நிறைவு செய்துள்ளார். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய இந்தக் கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.