வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை அநாகரிகமாக நடத்தி, ஒருமையில் பேசிய திருச்சி தெற்கு காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீருஷ்டிசிங்கிற்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம், பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ஆணையர் ஸ்ரீருஷ்டிசிங் முறையற்ற வகையில் நடந்துகொண்டது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.