ஜப்பானின் ரோலர் கோஸ்டர் பாலம் வாகன ஓட்டிகளுக்கு ஒரு சவாலான பாலமாகும். அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

‘ரோலர்கோஸ்டர் பாலம்’ (Rollercoaster bridge) என்று அழைக்கப்படும் ஜப்பானின் எஷிமா ஓஹாஷி (Eshima Ohashi) பாலம், ஷிமானே மாகாணத்தில் உள்ள மட்சூயேவையும், டோட்டோரி மாகாணத்தில் உள்ள சகாய்மினாடோவையும் இணைக்கிறது. சுமார் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். பாலத்தின் அடியில் பெரிய கப்பல்கள் எளிதாகச் செல்வதற்காக, இது மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளது.

அணு ஆயுத போர்: எதிரிகள் போடும் மாஸ்டர் பிளான்; அமெரிக்காவின் இந்த 5 இடங்கள் தான் முதல் இலக்கு

செங்குத்தாக பாலமா?

இந்த வகை பாலங்களில் உலகிலேயே மூன்றாவது பெரிய பாலமான இது, குறிப்பிட்ட கோணங்களில் இருந்து பார்க்கும்போது கிட்டத்தட்ட செங்குத்தாக (Vertical) காட்சியளிக்கிறது. சுமார் 1.1 மைல் அதாவது 1.7 கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலம், நகெளமி ஏரியின் குறுக்கே 147 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக நிற்கிறது. 1997 முதல் 2004 வரை நடைபெற்ற இதன் கட்டுமானப் பணிகள், பல குறைபாடுகளைக் கொண்டிருந்த பழைய தூக்கு பாலம் முறைக்கு மாற்றாக அமைந்தது.

பழைய பாலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 4,000 வாகனங்கள் மட்டுமே செல்ல முடிந்தது. ஆனால், புதிய பாலத்தில் தற்போது 24 மணிநேரத்தில் சுமார் 14,900 வாகனங்கள் கடந்து செல்கின்றன. பழைய பாலத்தில் கப்பல்கள் கடக்கும்போது ஒவ்வொரு முறையும் சுமார் எட்டு நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய பாலத்தில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை.  முன்பு 14 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தற்போது அந்த வரம்புகளும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த பாலம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பாலத்தில் மக்கள் எப்படி வாகனங்களை செயல்படுத்துவார்கள்? இது வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ற பாலம் தானா? என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.