சின்போ நகருக்கு அருகிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா மோதல் கரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி உள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடல் என அமெரிக்கா பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் வட கொரியா, கிழக்குக் கடற்கரைப் பகுதியான சின்போ நகருக்கு அருகிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையானது இன்று காலை 6: 10 மணியளவில் நடந்துள்ளது. பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டதாகத் கூறப்படுகிறது.
இது 2026-ஆம் ஆண்டில் வடகொரியா நடத்தும் 7-வது ஏவுகணைச் சோதனையாகும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் இது 4-வது சோதனையாகும். ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் தென்கொரிய உளவுத்துறையின் முதற்கட்ட தகவல்களின்படி, இதில் வடகொரியாவின் மேம்படுத்தப்பட்ட ‘புக்கக்சோங்’ ரக ஏவுகணைகள் அல்லது புதிய வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக ‘சின்போ’ பகுதி வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தளம் என்பதால், இது எஸ்.எல்.பி.எம் (SLBM) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இன்று ஏவப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவை 500 கி.மீ முதல் 1500 கி.மீ வரை பாய்ந்து சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் தென்கொரியா மற்றும் ஜப்பானின் முழுப் பகுதியையும் வடகொரியாவால் குறிவைக்க முடியும்.
சின்போ பகுதியிலிருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணம், அந்த நாடு கடலுக்கு அடியிலிருந்தும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறனைப் பெற்றுவிட்டதை உலகிற்கு உணர்த்துவதற்காக தான் என்று கூறப்படுகிறது. வரும் மே மாதம் சீன அதிபரை டிரம்ப் நேரில் சந்திக்கிறார். இந்நிலையில், தாங்கள் ஒரு வலிமையான அணு ஆயுத நாடு என்றும் ஈரானை போல எங்கள் மீது எளிதில் தாக்குதல் நடத்த முடியாது என்றும் வடகொரியா தெளிவுப்படுத்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
