அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் தொடர்ந்து விசாரணை நடத்துவார் என்று தமிழக சட்டமன்ற செயலாளர் சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் த.வெ.க. அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பு கோரியது. அப்போது, அ.தி.மு.க. கொறடாவின் உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் வாக்களித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த விசாரணை நிலுவையில் இருந்த சூழலில், சம்பந்தப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.
ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள்:;
மரகதம் குமாரவேல் (மதுராந்தகம் தொகுதி)
ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி)
சத்தியபாமா (தாராபுரம் தொகுதி)
இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி)
சபாநாயகர் இந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரியும் அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவியும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக சட்டமன்ற செயலாளர் சாந்தி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை செல்லாதாகி விடும் என்று கூற முடியாது. அவர்கள் தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது; சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார். ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பாக தகுதி நீக்க மனு மீதுதான் முதலில் முடிவெடுக்க வேண்டும் என்று எந்தவொரு விதியும் இல்லை.
4 எம்.எல்.ஏ.க்களும் தாமாக முன்வந்து, தங்கள் கைப்பட எழுதித்தான் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர். இதில் சபாநாயகர் அவசரம் காட்டியதாகவோ அல்லது உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சபாநாயகர் தனது அரசியல் சாசன கடமையையே நிறைவேற்றியுள்ளார். தகுதி நீக்க விசாரணையில் சபாநாயகர் இறுதி முடிவு எட்டிய பிறகே நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியும். மேலும், காலியிடங்களுக்கு தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோருவது ஏற்புடையதல்ல. குறித்த காலத்திற்குள் தகுதி நீக்க மனு மீது சபாநாயகர் முடிவெடுப்பார் என்பதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டமன்ற செயலாளர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இசக்கி சுப்பையா தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யாததால், வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
