தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மைக்கு மிக அருகில் வந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி அவர் ஏதேனும் ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளதால், சட்டசபையில் த.வெ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 5 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி த.வெ.க-விற்குத் தனது ஆதரவை அளித்தது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), விடுதலைச் சிறுத்தைகள் (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. இதன் மூலம் த.வெ.க-விற்கு மொத்தம் 120 சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் கிடைத்துள்ளது.

விஜயின் பதவியேற்பை நேரலையில் காண இங்கே க்ளிக் செய்யவும்.

இதனைத் தொடர்ந்து, தமிழகப் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்த த.வெ.க தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் கவர்னரிடம் வழங்கினார். ஆதரவு கடிதங்களை ஆய்வு செய்த கவர்னர், விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைத்தார். 

இதையடுத்து தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், விஜய்க்கு பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.