ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறும் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பது, த.வெ.க கூட்டணியில் வி.சி.க, பா.ம.கவை இணைப்பதற்கான அரசியல் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.

மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைகோ ஆற்றிய உரைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள், 6 பாகங்கள் கொண்ட ஆங்கில நூல் தொகுப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று ஆவணப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, புது டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா அரங்கில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
தேசிய மற்றும் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிட, தமிழக முதல்வர் விஜய் அதனைப் பெற்றுக் கொள்கிறார். தேசிய அளவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதால், இது ஒரு முக்கிய அரசியல் மேடையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் சபாநாயகர் ஜெகதீப் தன்கர், சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
