மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் சதம் விளாசிய சி.எஸ்.கே வீரர் என்கிற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்து அசத்தினார். அத்துடன், டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில், சஞ்சு சாம்சன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறி வரும் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் – ருதுராஜ் கெய்க்வாட் களம் புகுந்தனர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியை விரட்டிய கேப்டன் ருதுராஜ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் சர்பராஸ் கான் 14 ரன்னுக்கும், சிவம் துபே 5 ரன்னுக்கும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 

சிறிது நேரம் தாக்குப் பிடித்த டெவால்ட் ப்ரீவிஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸரை விளாசி 21 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனிடையே, சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த தொடக்க வீரர் சஞ்சு 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பிறகு களமிறங்கிய வீரர்களில், 2 சிக்ஸரை பறக்கவிட்ட கார்த்திக் சர்மா 18 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த ஜேமி ஓவர்டன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி 15 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சதம் விளாசி அசத்தினார். 

இதன் மூலம் ஒரே சீசனில் 2 சதங்களை பதிவு செய்த சி.எஸ்.கே வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் சதம் விளாசிய சி.எஸ்.கே வீரர் என்கிற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்து அசத்தினார். அத்துடன், டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில், சஞ்சு சாம்சன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

 டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்

9 – விராட் கோலி
9 – அபிஷேக் சர்மா
8 – ரோஹித் சர்மா
8 – சஞ்சு சாம்சன்*

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

8 – விராட் கோலி
7 – ஜோஸ் பட்லர்
6 – கிறிஸ் கெய்ல்
5 – கே.எல். ராகுல்
5 – சஞ்சு சாம்சன்*

இந்த ஆட்டத்தில், 54 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்ஸரை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 101 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் சிறப்பான பேட்டிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள்  எடுத்தது. இதனால், மும்பை இந்தியன்சுக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை துரத்திய அந்த அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த மும்பை அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்கிற சாதனையை சென்னை அணி படைத்துள்ளது. மேலும், ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக சென்னை அணி எந்தவொரு அணிக்கு எதிராகவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சென்னை அணி தரப்பில் தரமான பவுலிங்கை வெளிப்படுத்திய அகேல் ஹொசைன் 4 விக்கெட்டையும், நூர் அகமது 2 விக்கெட்டையும், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.