ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்தத் தொடரில், நேற்று வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பவுலிங் வீசியது. அதனால், முதலில் பேட்டிங் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 19.2 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 155 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தார். மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தி குஜராத் அணி தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டையும், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டையும், ககிசோ ரபாடா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். 

தொடர்ந்து, 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 15.5 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சிறப்பாக மட்டையைச் சுழற்றிய கேப்டன் சுப்மன் கில் 43 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் எடுத்தனர். அபார பந்துவீச்சுடன் மிரட்டலான கேட்ச்சையும் பிடித்து அசத்திய ஜேசன் ஹோல்டர் ஆட்டத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

கலாய்த்துக் கொண்ட கோலி – கில்

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.