தயாரிப்பு நிறுவனம் ஜூலை 24 அல்லது ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஒரு நாள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் கடந்த 6 மாதங்களாக தாமதம் நீடித்து வந்த நிலையில். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) நேற்று முன்தினம் (ஜூலை 1) சில வெட்டுக்களுக்கு உட்பட்டு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்சார் தரப்பில், திரைப்படத்தில் வெட்டப்பட்ட காட்சிகளின் பட்டியல் (Edit list) இன்று அல்லது வரும் திங்கட்கிழமை சென்சார் போர்டு இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், இறுதி தணிக்கைச் சான்றிதழ் அடுத்த வாரம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜூலை 24 அல்லது ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஒரு நாள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து என்.டி.டிவி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மே மாதத்தில், தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு இப்படத்திற்கு அனுமதி அளித்து, இருப்பினும், கடந்த சில மாதங்களாக இந்த தணிக்கை செயல்முறையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இப்படம் ஆரம்பத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் தணிக்கை மறுஆய்வு செயல்முறையை முடித்திருந்தது. ஆனால் தணிக்கைக் குழு 2025 டிசம்பரில் படத்தை ஆய்வு செய்து சில வெட்டுக்களைப் பரிந்துரைத்தது, அதை படக்குழுவினர் செய்தும் முடித்தனர். இதன்பின், படம் 2026 ஜனவரி 9 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.

இருப்பினும், தணிக்கைக் குழுவின் உறுப்பினர் ஒருவர், படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷிக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்பட்டதை அடுத்து, தணிக்கை செயல்முறையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த ஆட்சேபனைகள் எழுப்பப்பட்ட பிறகு, தணிக்கை வாரிய தலைவர் இந்த விவகாரத்தை புதிய ஆய்விற்காக மறுஆய்வுக் குழுவிற்கு மாற்றினார்.

இதற்கிடையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்து ‘ஜனநாயகன்’ படத்தின் இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தையும், பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக சான்றிதழை வழங்க முடியவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. தற்போது தமிழகத்தின் முதல்வர் விஜய் நாயகனாக நடித்துள்ளதால், இத்திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் தமிழ் திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

முன்னதாக, ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனருமான வெங்கட் கே. நாராயணா, கூறுகையில், “நாங்கள் அனைவரும் ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாவதற்குக் காத்திருக்கிறோம். நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் உள்ளன. தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். அவர்கள் இறுதி ஒப்புதல் அளித்தவுடன், உடனடியாகப் படத்தை திரையரங்குகளுக்குக் கொண்டு செல்வோம்” என்றார்.

விஜய்யின் அரசியல் பயணம் இந்தத் திரைப்படத்தின் தலைப்பிற்கு எவ்வாறு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது என்பது குறித்து பேசிய அவர், உண்மையில், ரசிகர்கள் அனைவரும் இதையேதான் கேட்கிறார்கள். டைட்டில் கார்டை ‘தளபதி விஜய்’ என்பதில் இருந்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்று மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்கள் படத்தை ஆரம்பிக்கும் போது, இவ்வளவு விஷயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஒருவகையில் பார்த்தால், விஜய் சார் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், உண்மையிலேயே தமிழகத்தின் ‘ஜனநாயகன்’ ஆகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியான தருணம். அவர் சிஎம் ஆன பிறகு இந்த படம் வெளியாக வேண்டும் என்பது விதியாக இருக்கலாம்” என்றார்.

இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சமீபத்தில் இணையதளத்தில் கசிந்தது (Leak). பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்தின்படி, இந்த கசிவு தொடர்பாக ஒரு ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்