தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், திருப்பதியில் அமைச்சர் வினோத் இன்று பூஜை செய்து வழிபட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, அடுத்த நாளான ஆக.6-ம் தேதி வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம், கடந்த ஜூலை 27-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் வினோத், நீர்ப்பாசன வசதி, இயற்கை வேளாண்மை வசதிகள், பயிர் காப்பீடு உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும். 2026-27-ஆம் ஆண்டில் 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இலக்காக நிர்ணயித்து, அதனை எட்டுவதற்காகப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 1) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரைவு வேளாண் நிதிநிலை அறிக்கை ஆவணங்களை வைத்துப் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதால், திருப்பதி வெங்கடாஜலபதியிடம் அருள்பெற வந்தோம் என்று தெரிவித்தார். வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
