“தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் நினைக்கும் எழுச்சியை நாம் பார்க்கிறோம். அது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது” என்று சி.பி.எம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) போட்டியிட்டது. 233 தொகுதிகளில் விசில் சின்னத்திலும், எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தும் இருந்தது. 

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் த.வெ.க கட்சி தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. கடந்த 29 ஆம் தேதி வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் சில விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டன. அன்று வெளியான கருத்துக் கணிப்புகளில், ஐந்து கணிப்புகள் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும், இரண்டு கணிப்புகள் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும் கூறின.  

அதேநேரத்தில் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 35 சதவீத வாக்குகளையும், 234 தொகுதிகளில், 98 முதல் 120 இடங்களில் வென்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைக்கும் என்றும் தெரிவித்தது. இது த.வெ.க வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களை குஷியில் ஆழ்த்தியது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றிய பேசிய பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும்,  த.வெ.க குறிப்பிடத்தக்க வாக்குகளை மட்டும் பெறும் என்றும் கூறியிருந்தார்கள். மேலும் விஜய் உட்பட சில வேட்பாளர்கள் மட்டும் வெற்றியைப் பெறுவர் என்றும் குறிப்பிட்டனர்.