புதுச்சேரி அம்பேத்கர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் சூழலில், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கடலூர் சாலையில் ரோடியர்பேட் அருகே நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளால் சாலை முழுமையாக மூடப்பட்டிருப்பதால், இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்வதற்கான மாற்றுப் பாதையை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது வாகனங்கள் அம்பேத்கர் சாலை உள்ளிட்ட குறுகிய சாலைகள் வழியாக திருப்பிவிடப்படுவதால், அப்பகுதி மக்கள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றனர்.

மேலும், துறைமுக மைதானத்தில் அடிக்கடி பிரம்மாண்ட தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால், நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் அம்பேத்கர் சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பே போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறைகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மற்றும் இமாகுலேட் பள்ளி ஆகிய நகரின் முக்கிய தனியார் பள்ளிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிகளுக்கு வரும் வாகனங்களை பள்ளி வளாகத்துக்குள் நிறுத்த அனுமதிக்காததால், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, பள்ளி வேன்கள் பள்ளி முடியும் வரை சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடைகிறது. இதைத் தவிர்க்க காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், ரயில் நிலையம் அமைந்துள்ள சுப்பையா சாலையில் தனியார் வேன்கள் மற்றும் பேருந்துகள் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு பார்க்கிங் இடமாக பயன்படுத்தப்படுவது, அம்பேத்கர் சாலை மற்றும் சுப்பையா சாலைகளில் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள தற்காலிக கடைகள் ஆகியவையும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அப்பகுதிக்கு வருகை தருகின்றனர். அதே நேரத்தில், துறைமுக மைதானத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து தனியார் பொருட்காட்சி நடைபெற உள்ளதால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வரும் உப்பளம் தொகுதி மக்கள் மேலும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உருவாகும் என்று அன்பழகன் தெரிவித்தார்.

சமீபத்தில் துறைமுக மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய அவர், இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது மாற்றுப் பாதைகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த வாரத்திலேயே அம்பேத்கர் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடி மாற்றுப் பாதை ஏற்பாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். மேலும், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு ஆக்கபூர்வமான பரிந்துரைகளும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.