அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த 2 மாணவிகள் புதுச்சேரி அரசின் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான இடஒதுக்கீட்டில் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
திருபுவனையைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் கஸ்தூரியின் மகள் அன்பரசி, இந்த உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை இழந்த அன்பரசி, அதன் பின்னர் தாய்க்கு துணையாக பானிபூரி கடையில் வேலை செய்துகொண்டே தனது படிப்பை தொடர்ந்தார். கடினமான சூழலிலும் விடாமுயற்சியுடன் படித்து, நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று அரசு இடஒதுக்கீட்டின் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உள்ளார்.
