தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் ‘அறிவகம்’ (Arivagam) என்ற பெயரில் தன்னிறைவு பெற்ற ஏ.ஐ நகரம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மாநிலத்தை முன்னணி மையமாக மாற்றும் நோக்கில் புதிய ஏ.ஐ. மிஷன் மற்றும் ஏ.ஐ நகரம் (AI City) அமைக்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் பட்ஜெட் ஆலோசனைகளில் தற்போது இந்தத் திட்டம் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்காக தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள இதேபோன்ற திட்டங்களையும் அரசு ஆய்வு செய்து வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது..
1,000 ஏக்கரில் முழுமையான ஏ.ஐ வளாகம்
முதல் கட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் தன்னிறைவு பெற்ற AI நகரம் உருவாக்கப்படலாம். இதில்,
ஏ.ஐ. நிறுவனங்களுக்கான அலுவலகங்கள்
ஏ.ஐ. மாதிரி (Model) உருவாக்க மையங்கள்
ஆராய்ச்சி மையங்கள்
உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres)
குடியிருப்பு வசதிகள்
பூங்காக்கள்
விளையாட்டு மைதானங்கள்
உள்ளிட்ட அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை டிட்கோ மற்றும் தொழில்துறைத் துறை இணைந்து செயல்படுத்தலாம் என்றும், இது கடந்த திமுக ஆட்சி அறிவித்த AI Park திட்டத்திலிருந்து தனித்திட்டமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டார்ட்அப்களுக்கு ஏ.ஐ. கணினி வசதிக்கு மானியம்
தமிழகத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் டெவலப்பர்களுக்காக ஏ.ஐ. கம்ப்யூட் (AI Compute) வசதியை குறைந்த செலவில் வழங்கும் மானியத் திட்டத்தையும் அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக திறன் கொண்ட ஜி.பி.யு. (GPU) மற்றும் கணினி வளங்களை மலிவு விலையில் பயன்படுத்தும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.
3,000 ஏக்கராக விரிவடையும் திட்டம்
முன்னதாக நடைபெற்ற எஃப்.ஐ.சி.சி.ஐ. (FICCI) டிஜிட்டல் மாநாட்டில் பேசிய மாநில AI துறை அமைச்சர் ஆர். குமார், AI நகரம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (Creches), பல்கலைக்கழகங்கள், உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட முழுமையான சூழலுடன் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
”சென்னை அருகே சில நிலப்பரப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு இந்த ஏ.ஐ. நகரம் 3,000 ஏக்கருக்கும் அதிகமாக விரிவடையும்.
மேலும், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் AI திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான சிறப்பு மையங்களும் அமைக்கப்படும். ஏ.ஐ. தொழில்நுட்பம் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், தமிழ்நாட்டை உலகளவில் போட்டியிடக்கூடிய மாநிலமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் சர்வதேச திறமையாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் உலகத் தரத்திலான குடியிருப்பு வசதிகளும் இதில் இடம்பெறும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் ‘அறிவகம்’ (Arivagam) என்ற பெயரில் தன்னிறைவு பெற்ற ஏ.ஐ. நகரம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் பல்கலைக்கழகங்கள், செமிகண்டக்டர் ஆய்வகங்கள் மற்றும் உலகத் தரத்திலான குடியிருப்பு வசதிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முந்தைய திட்டங்களும் தொடர்கின்றன
முந்தைய தி.மு.க .அரசு அறிவித்த ஏ.ஐ. பார்க் திட்டத்தின் கீழ் ஏ.ஐ டேட்டா செண்டர், ஆராய்ச்சி மையங்கள், அலுவலக வளாகங்கள், உயர் திறன் ஜி.பி.யு. (GPU) கணினி வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தன.
மேலும், ஏ.ஐ. தரவு மையங்கள், தமிழுக்கான பெரிய மொழி மாதிரி (Tamil-focused Large Language Model) மற்றும் அரசு பயன்பாடுகளுக்கான AI தீர்வுகளை உருவாக்க சர்வம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் பணிகளும் தொடர்கின்றன.
அதே நேரத்தில், முந்தைய ஏ.ஐ. பார்க் திட்டங்கள் அனைத்தும் தற்போது மறுஆய்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு திட்டமும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
