ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்திக்க இருந்த நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்ற பிறகு, மேகதாது அணைக்கட்ட தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. கர்நாடக வரும் முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். 

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையம் கூறி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டி.கே.சிவக்குமார் காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களை நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக தமிழக முதல்வரின் அலுவலகத்திலிருந்து எங்கள் தலைமைச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இருவரும் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம்.

இருப்பினும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளுக்குப் பிறகு, தற்போதைய சூழல் அதற்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதுகிறேன். உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதலையும், தீர்ப்பையும் வழங்கியுள்ளது. மேகதாது அணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது எங்களை விடத் தமிழகத்திற்கே அதிகப் பலனளிக்கக்கூடியது. மின் உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் அது தமிழகத்திற்கு அதிக நன்மையை அளிப்பதாகவே உள்ளது.

முன்னரே எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எந்தவொரு உத்தரவையும் மீற நாங்கள் விரும்பவில்லை. அதேவேளையில், எங்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இது குறித்த தகவல்களைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம். பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது” என்றார்.