மத்திய தொகுப்பில் உள்ள சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் முடிவாகும். இதைச் சட்டப் போராட்டத்தின் மூலமே வென்றெடுப்போம்.

கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.  

அப்போது அவர் கூறியதாவது:

“சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை மத்திய அரசுக்குத் தவெக அரசு விட்டுக்கொடுத்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் ஒருவர் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் (2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில்) முறையே 119 மற்றும் 145 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை நிரப்ப முடியாமல், எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய அரசுக்கு ஒப்படைத்தனர்.

சேவை மருத்துவர்கள் இருந்தும் கட் ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்ததால், அவர்களுக்குச் சேர்க்கை கிடைக்கவில்லை. கட் ஆஃப்-ஐ குறைக்க மத்திய அரசின் டி.ஜி.எச்.எஸ் (DGHS) அனுமதிக்காத நிலையிலும், இடங்கள் மத்திய தொகுப்பிற்குச் சென்ற பிறகு கட் ஆஃப் குறைக்கப்பட்டுச் சேர்க்கை நடத்தப்பட்டது.

மாநில உரிமைகளுக்காகத் தொடர் வாதங்களை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய ஆணையைப் பெற்றுள்ளோம். ஒன்றிய கவுன்சிலிங்கில் கட் ஆஃபைக் குறைக்காமல் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும். ஒருவேளை கட் ஆஃபைக் குறைக்க முடிவெடுத்தால், அந்த இடங்களை மாநில தொகுப்பிற்கே வழங்கிட வேண்டும்.

மத்திய தொகுப்பில் உள்ள சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் மாநில தொகுப்பின் வாயிலாக மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பதே தவெக அரசின் முடிவாகும். இதைச் சட்டப் போராட்டத்தின் மூலமே வென்றெடுப்போம்” என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.