கார் விபத்துக்குள்ளானதை உணர்ந்தவுடன், காரை ஓட்டிவந்த சிறுவனைத் தவிர அவருடன் வந்த 5 நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்.

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு விளிம்பில் தொங்கியதால் அப்பகுதியில் நேற்று இரவு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் (16 வயது சிறுவன்) ஒருவன், தனது நண்பர்கள் ஐந்து பேருடன் காரில் தில்லைநகர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர்கள், அண்ணாமலை நகர் ரயில்வே மேம்பாலம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அந்தச் சிறுவனே ஓட்டியுள்ளார். மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, தனக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. 

அதோடு நிற்காமல், மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருந்த இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. ஆனாலும், மேம்பாலத்தின் விளிம்பில் கார் ஆபத்தான முறையில் தொங்கி நின்றது. காரின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் , உடனடியாக விரைந்து  காரில் சிக்கியிருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், கார் விபத்துக்குள்ளானதை உணர்ந்தவுடன், காரை ஓட்டிவந்த சிறுவனைத் தவிர அவருடன் வந்த 5 நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்.