முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கவிழ்க்க ரூ.180 கோடி திரட்டி, எம்.எல்.ஏ-க்களை விலை பேச முயன்ற வழக்கில் யூடியூபர்கள் உட்பட 8 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்; இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பது அவர்களின் வாக்குமூலத்தில் அம்பலமாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக இந்த வழக்கில் கைதானவர்கள் காவல் துறையில் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சதித்திட்டம் தீட்டியதாகவும் ஒரு வாரம் நட்சத்திர ஓட்டலில் திட்டமிட்ட நிலையில் விவகாரம் கசிந்ததால் காலி செய்தோம்” என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் த.வெ.க மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ என். இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக த.வெ.க எம்.எல்.ஏ என்.இளையராஜா, அண்மையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சந்தித்து புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், சென்னையைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், சீனிவாசன், செல்வன், ராஜேஷ், முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசை கவிழ்க்க ரூபாய் 180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. த.வெ.க ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ரூ. 180 கோடி வரையில் ஒதுக்கப்பட்டதாகவும், ஊத்தங்கரை எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சம்மதம் தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்க முதற்கட்டமாக ரூ.180 கோடி திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரட்டப்பட்ட ரூ.180 கோடியை கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

மேலும், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று ஆட்சியைக் கவிழ்க்கும் சதித் திட்டத்தில் ஒரு வாரமாக ஈடுபட்டிருந்ததாகவும், விவகாரம் வெளியில் கசிந்ததால் அங்கிருந்து காலி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சதித் திட்டத்தில் ஈடுபட்ட கார்ப்பரேட் நிறுவனம் கண்டறியப்பட்டதாகவும், கூடிய விரைவில் சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. ஆட்சி கவிழ்ப்புக்கு உதவ முன்வரும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தயார் செய்து சதி ஆலோசனை நடைபெற்றதாக போலீசார் தகவல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.