அ.தி.மு.க சமரசப் போக்கைக் கையாண்டு தனது அடையாளத்தை இழந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அதிரடியாக விலகியுள்ளார்.

அ.தி.மு.க தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். தி.மு.க-வோடு இணைந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டதன் மூலம் கட்சி தன் தனித்துவத்தை இழந்துவிட்டதாகவும், சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதால் வெற்றிப் பாதையிலிருந்து விலகிவிட்டதாகவும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க எம்.எல்.ஏ.கள், முன்னால் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அ.தி.மு.க-வில் இருந்து அடிப்படை உறுப்ப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வைகைச் செல்வன் கூறியிருப்பதாவது: “அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.
ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.
