கருத்தம்மா படத்திற்காக பாரதிராஜாவுக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இது பாரதிராஜா வாங்கிய 4-வது தேசிய விருதாகும். 

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா பல வெற்றிப்படங்களை இயக்கியிருக்கும் நிலையில், கருத்தம்மா படத்திற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

1994-ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படம் பெண் சிசு கொலையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. நடிகர் ராஜா நாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி பாரதிராஜா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றைக்கும் கேட்டு ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது, இந்த படத்திற்காக பாரதிராஜாவுக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இது பாரதிராஜா வாங்கிய 4-வது தேசிய விருதாகும். 

இந்த விருது வாங்குவதற்காக டெல்லி செல்ல இருந்த பாரதிராஜாவின் மனநிலை குறித்து பேசியுள்ள அவரது தம்பி ஜெயராஜ், கருத்தம்மா’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் மலேசியாவில் இருந்தார். நான் அவர்கிட்ட யாருக்கெல்லாம் டிக்கெட் புக் போட வேண்டும் என்று கேட்டேன். அப்போது அவர் மூணு டிக்கெட் புக் பண்ணச் சொன்னார். யார் யாருக்குன்னு நான் கேட்டப்போது, என் அண்ணிக்கு (பாரதிராஜா மனைவி), பாரதிராஜாவுக்கு, அப்புறம் என் அம்மாவுக்கு என்று சொன்னார். இப்படி மூணு பேருக்கும் தனித்தனியா டிக்கெட் புக் பண்ணச் சொன்னார்.

அப்போதே நான் நினைச்சேன், ‘சரி, அவர் தன் அம்மாவைத் தன் பக்கத்துல வெச்சுக்கிட்டு தான் இந்த விருதை வாங்கப் போறார்’ அப்படின்னு. அதுதான் அவரோட ஆசையா இருந்தது, அதுதான் அவரோட கனவா இருந்தது. தன் அம்மாவைக் கூட்டிட்டு வந்து அங்கே நிக்க வைக்கணும்னு அவர் சொன்னார். அம்மா மேல அவருக்கு இருந்த பாசம் அளவிட முடியாதது. அது ஒரு அசாதாரணமான, சொல்ல வார்த்தைகளே இல்லாத பேரன்பு. அதனால, தன் அம்மாவுக்காக வேற என்னதான் அவரால் செய்ய முடியும்? வேற எந்த வழியிலும் இதைவிட எதையும் செஞ்சிட முடியாது.