தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்குவதற்காக 5 மண்டலங்கள் உருவாக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படியும், தூய்மையான, நேர்மையான, புதுமையான மற்றும் மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற அரசின் உயரிய நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் எளிமையான சேவைகளை வழங்கவும் முக்கிய நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிக்காக 5 புதிய மண்டலங்கள் 

அதன் ஒரு பகுதியாக, காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (NCES) வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களை தலைமையிடங்களாகக் கொண்டு ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அரசின் பசுமை ஆற்றல் இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தும் வகையில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.