தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்; அவருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. அக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை முதலமைச்சராக நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மே 9 வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மே 10 காலை 10 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார்.
இந்த அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
