தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஏப்ரல் 30-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.30 கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஏப்.29) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் ஏப்.30, மே 1, 2 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 1-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மே 2-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
