கோவையில் டாஸ்மாக் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்; இருவர் லேசான காயங்களுடன் தப்பினர்.

கோயம்புத்தூர் கண்ணப்பநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்துச் சிதறியதில், ஒருவர் படுகாயமடைந்தார். கோவை கண்ணப்பநகர் பகுதியில் ’11 to 11′ டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அமைந்துள்ள மின்மாற்றியில் நேற்று காலை எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மின்மாற்றி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
மின்மாற்றி வெடித்த வேகத்தில், அதற்குள் இருந்த ஆயில் அனலாகத் தெறித்து அருகில் நின்றிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த மதுரை வீரன் (23) என்ற வாலிபருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவருடன் இருந்த மேலும் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். படுகாயமடைந்த மதுரை வீரன் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லேசான காயமடைந்த மற்ற இருவர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர்.
