தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 120 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுகவின் நிலை என்ன?

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10% வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, த.வெ.க, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கணிப்பின்படி, தமிழகத்தில் இதுவரை வெளியான மற்ற அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவை ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ளது:

நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க, தனது முதல் தேர்தலிலேயே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சி 98 முதல் 120 இடங்கள் வரை பெற்று முன்னிலை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை 118 ஆகும்). ஆளும் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை பெற்று 2-ம் இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க 22 முதல் 32 இடங்கள் வரை பெற்று பின்னடைவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.