தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஓய்ந்து, வாக்குப்பதிவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சிறிய ஓய்வு எடுக்க வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், இன்று காலை தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க-வின் வெற்றியை உறுதி செய்ய, அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெயில் மற்றும் தேர்தல் நெருக்கடிகளுக்கு இடையே ஓய்வின்றி பணியாற்றிய அவர், தனது தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர களப்பணியை மேற்கொண்டிருந்தார்.