வால்பாறையில் சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து 16 சுற்றுலாப் பயணிகளுடன் வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று, பொள்ளாச்சி – வால்பாறை பிரதான சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 800 அடி ஆழப்பள்ளத்தில் பாய்ந்தது.
மலைச்சாலையிலிருந்து நிலைதடுமாறி உருண்டு விழுந்த அந்த வாகனம், பாறைகளில் மோதி முற்றிலும் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில், வேனில் பயணம் செய்தவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் நேரிட்ட இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கியிருந்த மற்ற 6 பயணிகளையும் உயிருடன் மீட்ட மீட்புப் படையினர், அவர்களுக்கு முதலுதவி அளித்து உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயக்கூடும் என அஞ்சப்படுகிறது.
