கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் அளிக்கப்பட்ட 30 நாள் விலக்கை அமெரிக்கா புதுப்பிக்காது என்று கடந்த செவ்வாய்க்கிழமை காலை தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ளாமல் ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் விலக்குகளை அமெரிக்கா புதுப்பிக்காது என்று அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமை அன்று தெரிவித்தது.இந்த வாரம் காலாவதியாக இருந்த கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் அளிக்கப்பட்ட 30 நாள் விலக்கை அமெரிக்கா புதுப்பிக்காது என்றும், ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளில் அளிக்கப்பட்ட இதே போன்ற விலக்கை கடந்த வார இறுதியுடன் முடிவுக்கு வர அனுமதித்தது என்றும் செவ்வாயன்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிப்பதன் மூலம், அந்த நாட்டுக்கு அதிக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தயாராகி வருவதாக பெசன்ட் எச்சரித்தார்.அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தும் போரினால், உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் ஜலசந்தி வழியாகப் போக்குவரத்தை ஈரான் தடை செய்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகையை விதித்துள்ளது; இது கடல் வழியாக அந்த நாட்டுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் வர்த்தகத்தை முற்றிலும் முடக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பால் வியாழக்கிழமை உலகச் சந்தையில் சாதகமான சூழல் நிலவியது. அமெரிக்கா-ஈரான் பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையால், விநியோகத் தட்டுப்பாடு குறித்த கவலை நீங்கி கச்சா எண்ணெய் விலை ஆரம்ப வர்த்தகத்தில் சரிந்தது. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் 44 சென்ட்கள் அல்லது 0.5% சரிந்து ஒரு பேரல் 94.49 அமெரிக்க டாலர்களாகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 70 சென்ட்கள் அல்லது 0.8% சரிந்து 90.59 டாலர்களாகவும் வர்த்தகமானது.

Follow us: