2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2026-27ஆம் ஆண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி, நடப்பு கல்வியாண்டிற்கான (2026-27) பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் (DCE) கீழ் இயங்கும் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் (ஆசிரியர்கள்), நூலகர்கள் (Librarians), உடற்கல்வி இயக்குநர்கள் (Physical Education Directors) ஆகிய பணியாளர்கள் இந்த பொது கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய நபர்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.