தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்ற தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், மின்கட்டண நிலையான கட்டணக் குறைப்பு, மூலப்பொருள் வங்கி மற்றும் குறுந்தொழில் பூங்கா குறித்த அறிவிப்புகள் இல்லாததால் கோவை தொழில்துறையினர் கடும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என கோவையைச் சேர்ந்த தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் முழுக்க ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். மின் கட்டணத்தில் நிலை கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளித்திருந்த நிலையில், அது குறித்து பரிசீலிப்பதாகக் கூறிய முதல்வர், பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். தவெக தமது தேர்தல் அறிக்கையிலேயே நிலை கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை கட்டணம் தொடர்ந்தால் சிறு தொழில்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும், புதியதாக அமைக்கப்படவுள்ள ஐந்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குறுந்தொழில்களுக்குச் சலுகை விலையில் திட்டங்கள் இருக்க வேண்டும் என்றும், புதிய தொழில் கொள்கை குறித்த பேச்சுவார்த்தைகளில் குறுந்தொழில் முனைவோரின் கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறுந்தொழில் முனைவோருக்கு வட்டி மானியத்தை 6 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும், கடந்த பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள கடன் தொகைகளை வழங்கி, கூடுதல் முதலீட்டு மானியங்களை அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
