நடிகை த்ரிஷாவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் வகுத்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து வெளியான செய்திகள் தற்போது மீண்டும் வைரலாக பரவ தொடங்கியது. அதில் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இது குறித்து த்ரிஷாவே தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார், இதனையடுத்து விரைவில் திருமணம் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், சில மாதங்களிலேயே அந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. என்ன நடந்தது என்பது குறித்து அப்போது அனைவரும் குழப்பமடைந்தனர்.

அதன் பின்னர், ஆன் மனோரமா (OnManorama) இதழில் வெளியான பேட்டியில், தனது முடிவின் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை திரிஷா வெளிப்படையாகக் கூறினார். அதில் நான் திருமணம் செய்து கொள்ள இருந்த நபர் என்னை நடிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். படங்களுக்குப் பதிலாக, எனது நிச்சயதார்த்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நான் முடிவு செய்தேன் என்று கூறியிருந்தார். 

உறவுகளில் சமரசம் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால், ஒருவருக்காக நம்மை மாற்றிக்கொள்வதற்கும், நம் அடையாளத்தையே முழுமையாக இழப்பதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. திரிஷாவைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது அவரது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். திருமணத்திற்காக கூட அதை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை.

திரையுலகத்துடன் தனக்கு இருக்கும் ஆழமான பிணைப்பு குறித்து பேசிய த்ரிஷா, நான் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமே நடிப்பிலிருந்து பிரேக் எடுப்பேன். எனக்கு முதன்மை கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றாலும், எனது பிம்பத்திற்கு ஏற்ற குணச்சித்திர வேடங்களில் நடிப்பேனே தவிர, திரையுலகை விட்டு விலகமாட்டேன். எனது கடைசி மூச்சு வரை நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியிருந்தார். 

அந்த சமயத்தில் வெளியான செய்திகளின்படி, இரு குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், வருண் மணியனின் குடும்பத்தினர் தங்களைப் போன்ற சமூகப் பின்னணியைச் சேர்ந்த ஒருவரைத் துணையாகத் தேடியதாகவும் கூறப்பட்டது. வேறு சில செய்திகள், இருவருக்கும் இடையே வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் வித்தியாசம் இருந்ததாகத் தெரிவித்தன. காரணம் எதுவாக இருந்தாலும், ஒருவரது ஆர்வத்தையும் இலட்சியத்தையும் காதலுக்காக விட்டுக்கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் இணையத்தில் எழுந்துள்ளது.

இதன் காரணமாகத்தான் திரிஷாவின் பழைய பேட்டி தற்போது இணையத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகும், த்ரிஷா இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார், வெற்றிகரமாகத் திகழ்கிறார். திரையுலகோடு இணைந்திருப்பேன் என்று அன்று சொன்னதை இன்று வரை செய்து வருகிறார். இதற்கிடையில், விஜய் மற்றும் திரிஷா குறித்த புதிய வதந்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இருவரும் இந்த வதந்திகள் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. அதே சமயம் மக்கள் இதைப் பற்றித் தொடர்ந்து பேசுவதைப் பார்த்தால், இந்த விவாதம் இப்போதைக்கு ஓயாது என்பது தெளிவாகத் தெரிகிறது.