தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானக் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. தூத்துக்குடிக்கு ரூ.17,000, மதுரைக்கு ரூ.14,000 என எகிறிய கட்டணங்களால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்காக சென்னை, பெங்களூர், டெல்லி, வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த அதீத தேவையால் விமானக் கட்டணங்கள் இன்று (ஏப்ரல் 22) விண்ணைத் தொட்டுள்ளன.
