காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி டெல்டாவில் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறிவரும் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தர வலியுறுத்தித் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் எனக் கடுமையாக வலியுறுத்தினார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறிவரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் 
பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது; காவிரி டெல்டாவில் 13 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது. கோடை பருத்தி பயிர்கள் அழிந்து வருகிறது. நிலத்தடி நீர் பறிபோய் ஒட்டு மொத்தமாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.