நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிக்கலாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 22 வயது வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய இருவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அஸ்வினை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பலத்த காயங்களால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் அஸ்வின் கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அஸ்வினின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, ரத்த மாதிரிகள், ஆயுத தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
