தொட்டி ஜெயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அடுத்து சூர்யாவின் கஜினி, கேப்டன் நடித்த சபரி, அஜித்தின் அசல், வீரம் விஜயின் ஜில்லா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.

இந்திய சினிமாவில் பல மொழிகளில் வில்லன் மற்றும் காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் நடித்து முத்திரை பதித்த நடிகர் பிரதீப் ராவத் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 74 வயது ஆகிறது.
1985-ம் ஆண்டு வெளியான அதிபர் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ராவத், அதன்பிறகு, 2005-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், அடுத்து சூர்யாவின் கஜினி, கேப்டன் நடித்த சபரி, அஜித்தின் அசல், வீரம் விஜயின் ஜில்லா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார், கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, பேஜ்பூரி, மராத்தி, நேபாளி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ள பிரதீப் ராவத், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் பிரதீப் ராவத்தின் மேலாளர் சித்தார்த் திவாரி, அவரது மறைவை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் எச்.டி சிட்டி-க்கு அளித்த பேட்டியில், “அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் மீண்டும் தீவிரமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார்” என்று தெரிவித்தார். பிரதீப் ராவத்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
