கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலப்பணிகள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த பொதுமக்கள் பாலம் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கோவை சாய்பாபா கோவில் சந்திப்பு உயர்மட்ட பாலம் எவ்வித ஆடம்பர விழா இன்றி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டதால் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

கோவை சாய்பாபா கோவில் சந்திப்பில் ரூ75 கோடி மதிப்பீட்டில் 1.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் எவ்வித ஆடம்பர விழா ஏற்பாடுகளும் இன்றி அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் விழா நடத்தும் வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது வழக்கம்.

இப்பாலத்தின் ஒப்பந்த காலம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக போக்குவரத்திற்காக திறந்து வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலப்பணிகள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த பொதுமக்கள் பாலம் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாலம் திறக்கப்பட்ட உடனேயே ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியாக பயணித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டதன் மூலம் சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த சிரமங்களில் இருந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.