“ஊழல் செய்ய மாட்டேன், செய்தவர்களையும் விடமாட்டேன்” என்று கூறிவிட்டு, குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரை கட்சியில் இணைப்பது முதலமைச்சர் ஜோசப் விஜயின் லட்சியத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எச்சரித்துள்ளார்.

“ஊழலுக்கு எதிராகப் பேசி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தற்போது அதிமுக-வைச் சேர்ந்த ஊழல்வாதிகளைத் தன் கட்சியில் இணைத்துக் கொள்வது அவரது லட்சியத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்; தயவு செய்து கவனமாக இருங்கள்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, குட்கா வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்திருப்பது, நேர்மையான ஆட்சி தருவேன் என்ற விஜயின் வார்த்தைக்கே சேதாரத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் சாடியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற சி.ஜோசப் விஜய் ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் செய்பவர்களையும் விட மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும், ஏற்கனவே ஊழல் செய்தவர்களையும் விடமாட்டேன் என்று விஜய் கூறியிருந்தால் விஜயின் இந்த பேச்சு மக்களுடைய பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்று சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். 

அப்படி, ஊழலுக்கு எதிராக பேசிய முதலமைச்சர் விஜய் அ.தி.மு.க-விலிருந்து சில ஊழல்வாதிகளை தமது கட்சியில் இணைத்து இருப்பது என்பது எந்த வகையில் ஏற்கக் கூடியது? அவ்வாறு சேர்ப்பதால் விஜயின் லட்சியமான ஊழலை ஒழிப்பேன், ஊழல்வாதிகளை தண்டிப்பேன், ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்யவும் விடமாட்டேன் செய்தவர்களையும் விடமாட்டேன் என்று கூறிவிட்டு இவ்வளவு பெரிய ஊழல்வாதிகளை சேர்த்தால் என்ன ஆகும்” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.