பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்களை தீவிரப்படுத்தவும், சட்ட அமலாக்க அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படவும் வலியுறுத்தப்பட்டது.

தமிழக ஜனதாதளத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கே.சி. ஆறுமுகம், அறிவழகன், கோவிந்தராஜ், ரெயில் குப்புசாமி, வழக்கறிஞர் ராஜசேகரன், மகளிரணி மாநிலத் தலைவர் ராமலட்சுமி, கடலூர் சங்கர், மாவட்டத் தலைவர்கள் சரவணன், ரவி, தஞ்சை கார்த்திக் நாகராஜ், துரைசாமி, திருச்சி மாவட்டத் தலைவர் அருண்குமார், நிர்வாகிகள் முருகானந்தம், கிஷோர், ராகுல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், மக்கள் நலன் மற்றும் மாநில உரிமைகளை வலியுறுத்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கர்நாடக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய ஒருமனதான தீர்மானத்தை தமிழக ஜனதாதளம் முழு மனதுடன் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் உரிமையை பாதுகாப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட கட்சி, இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், தமிழக ஜனதாதளத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் தர்மபுரி மாவட்டத்தில் இராசி மணல் பகுதியில் அணை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் வறட்சி பாதிப்பை குறைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, விவசாயிகளின் நீர்தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதியை முழுமையான நிரந்தர வேளாண் மண்டலமாக அறிவித்து, அப்பகுதியில் விவசாய நிலங்களை பாதுகாக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், நெல் மற்றும் பிற விளைபொருட்களுக்கு உரிய ஆதரவு விலையை உறுதி செய்தல், விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் மிகப்பெரிய சமூக அச்சுறுத்தலாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட கூட்டம், மாநில அரசு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்களை தீவிரப்படுத்தவும், சட்ட அமலாக்க அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படவும் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், ஆன்லைன் மூலம் நடைபெறும் சட்டவிரோத வர்த்தகங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற இணையவழி வணிக நடவடிக்கைகள் சிறு வியாபாரிகளை கடுமையாக பாதித்து வருவதாகக் குறிப்பிட்டு, இதுகுறித்து மத்திய அரசு உரிய கட்டுப்பாடுகளை விதித்து, சட்டவிரோத ஆன்லைன் வர்த்தகங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக ஜனதாதளம் கோரிக்கை விடுத்தது.
இதனுடன், மாநில உரிமைகளை பாதுகாப்பது, காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் நலனை முன்னிறுத்துவது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும், பெண்கள் சுயதொழில் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
