தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றியைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி களத்தில் இருந்த போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடச் சற்று குறைவாகவே தவெக இடங்களைப் பெற்றுள்ள போதிலும், சில கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெறுவதற்காக விஜய் இன்று தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். செல்லும் வழியெங்கும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை அடையாறில் உள்ள தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரின் இல்லத்திற்குச் சென்ற விஜய், அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தனது மகனின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கண்டு அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் மிகுந்த நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.