அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம், கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் என 74 வயதிலும், பஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் வலம் வரும் இவர், தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம், கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம் என 74 வயதிலும், பஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதனிடையே 80-90களில் உச்சத்தில் இருந்து வந்த ரஜினிகாந்த் தனது நண்பர்கள் சிலரை தயாரிப்பாளராக அறிமுகம் செய்திருந்தார். அந்த வரிசையில், நடிகர் செந்திலிடம்கூட நீங்கள் படம் தயாரியுங்கள் கால்ஷீட் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல், கவிஞர் வைரமுத்துவிடமும், கால்ஷீட் தருகிறேன் எப்போர் படம் தயாரிப்பீர்கள் என்று ரஜினிகாந்த் கேட்டதாக, வைரமுத்து வெளியிட்ட பழைய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரமுத்து ரஜினிகாந்த் குறித்து வெளியிட்ட பழைய எக்ஸ் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், கொடிபறக்குது’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது ‘சேலைகட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு’ பாடலை எழுதி எடுத்துக்கொண்டு பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருந்தேன்.’ ரஜினியை ஒப்பனையில் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்தேன் படப்பிடிப்புத் தளங்களில் பார்க்கமுடியாத என்னைப் பார்த்ததும் ரஜினி தன் உடல்மொழியில் ஆச்சரியம் காட்டினார். 

காட்சிகளின் இடைவெளியில் அவரும் நானும் தனியானோம். என் தோளில் கைபோட்டுக்கொண்டே ஓர் ஓரமாய்ப் பொடிநடை போனார். உறுதியான சொற்களில் என்னைப் பார்த்துச் சொன்னார்: “இளையராஜாவுக்கு ஒரு படம் பண்ணிவிட்டேன்; பாரதிராஜாவுக்கு இந்தப்படம் நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து நீங்கள்தான். எப்போது என்னை வைத்துப் படம் செய்யப் போகிறீர்கள்; நான் தயார்” என்றார். ஒன்றும் பேசாமல் நின்றேன் சில கணங்கள் சென்றபிறகு மீண்டும் தன்னிலை அடைந்தேன்.