கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த டி.ராஜேந்தர், தனது படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த்தை அனுகியபோது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் டி. ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.
தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்தார் டி.ராஜேந்தர். அதன்பிறகு, 1983-ம் ஆண்டு அவரே தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.
தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதனிடையே சமீபத்தில் அவரது ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது பற்றி டி.ஆர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார். அதைத் தொடர்ந்து, ‘என்னுடைய தேதிகள் இப்போது இல்லை. நான் உங்களுக்கு கெஸ்ட் ரோல் செய்து தருகிறேன்’ என்று சொன்னார்.
நானும் இந்தக் கதையைத் தயார் செய்துவிட்டு அவரை டப்பிங் ஸ்டுடியோவில் சந்தித்தேன். கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. கதையைக் கேட்டு முடித்ததும் என்னைக் கட்டிப்பிடித்தார். ‘இந்தப் படத்தை நிச்சயமாகச் செய்யலாம்’. ஆனால் அதில் வேறொரு விஷயம்தான் தடையாக வந்தது. ‘பெரிய தயாரிப்பு நிறுவனத்தை வைத்துப் படத்தைத் தயாரிக்கலாம்’ என்று சொன்னார். அப்போது என்னுடைய படத்தை நானே சொந்தமாக ரிலீஸ் செய்ததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது.
நான் எந்தப் பெரிய நிறுவனத்திற்குச் சென்றாலும் எனக்கும் அதே சம்பளம்தான் கிடைக்கும். இப்போது அந்தச் சம்பளம் போதாது. நஷ்டத்தை ஈடு செய்ய நானே படத்தைத் தயாரிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர், ‘நீங்களும் நானும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ், நம்முடைய நட்பு இதனால் முறிந்துவிடக் கூடாது. நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்’ என்று சொன்னார்.
