1967 முதல் நீடித்து வந்த தி.மு.க – அ.தி.மு.க ஆகிய 2 திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, புதிய அரசியல் அத்தியாயத்தை த.வெ.க தொடங்கியுள்ளது. திமுக 53 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க பெற்றுள்ள வெற்றி, 1967-ல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது மற்றும் 1977-ல் அ.தி.மு.க தொடங்கப்பட்டது முதலாக நீடித்து வந்த திராவிடக் கட்சிகளின் இருமுனைப் போட்டியை முதல்முறையாக உடைத்தெறிந்துள்ளது. தேர்தல் கணக்குகள், தந்திரக் கூட்டணிகள், பணபலம் மற்றும் சாதி அரசியலையும் தாண்டி இந்த வெற்றி கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்தத் தீர்ப்பு கடந்த கால அரசியல் நடைமுறையிலிருந்து பெரிய மாற்றமாகும்.

இது தி.மு.க தலைமையிலான அரசுக்கு எதிரான வலுவான அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் பெரியாரால் “பச்சைத் தமிழன்” என்று போற்றப்பட்ட காமராஜர், 1967 தேர்தலில் விருதுநகரில் சாதாரண மாணவர் தலைவரிடம் தோல்வியுற்ற அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை இந்த வெற்றி நினைவூட்டுகிறது. தி.மு.கவின் எழுச்சிக்கு காரணமான அடிமட்ட அளவிலான மக்கள் திரட்டல் வரலாறு த.வெ.க-வுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் காமராஜரின் தோல்வியைப் போலவே மு.க.ஸ்டாலினின் இந்தத் தோல்வியும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தி.மு.க.வின் சாதனைகள் மக்களிடம் சென்றடையவில்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விடத் தமிழகம் சிறப்பாக இருப்பதாகப் புகழாரம் சூட்டிய அந்தத் தரப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தேக்கமடைந்துள்ள ஊதியம் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் போன்ற முக்கியமான சிக்கல்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. 2021 தேர்தல் ‘திராவிட வளர்ச்சி மாதிரிக்கான’ அங்கீகாரமாக இருந்ததென்றால், 2026 தேர்தல் ‘திராவிட நிர்வாக மாதிரி’ மீதான விசாரணையாக மாறியுள்ளது. முறையான வேலைவாய்ப்புகள் இல்லாதது மட்டுமன்றி, இளைஞர்கள் மத்தியில் அந்நியப்பட்டு நிற்கும் நிர்வாக முறையும் திமுக மீதான அதிருப்திக்குக் காரணமாக அமைந்துள்ளது.