“இந்தியாவில் 26.70 கோடி பேர், அதாவது இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டியதன் தேவை குறித்து இந்தியப் பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2009-ஆம் ஆண்டும், அதற்கும் பிறந்தவர்கள், அதாவது இப்போது 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள் புகைப்பிடிப்பதற்கும், அவர்களுக்கு சிகரெட் மற்றும் இ – சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம்!
பொருள்: கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் 2009-ஆம் ஆண்டுப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை இயற்றக் கோருதல் – தொடர்பாக
இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டியதன் தேவை குறித்து இந்தியப் பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய கிரேட் பிரிட்டனின் உறுப்பு நாடுகளில் 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் புகை பிடிப்பதையும், அவர்களுக்கு சிகரெட், மின் சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்வதையும் தடை செய்ய வகை செய்யும் சட்ட முன்வரைவு (Tobacco and Vapes Bill) பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரு ஆண்டுகளாக நடைபெற்ற விரிவான விவாதங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாத மத்தியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த சட்டத்திற்கு பிரிட்டன் மன்னர் ஒப்புதல் அளித்த பிறகு 2027-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின்படி, பிரிட்டனில் 2009-ஆம் ஆண்டு முதல் பிறந்தவர்களுக்கு, அதாவது இப்போது 18 வயதுக்கும் குறைவாக இருப்போருக்கு சிகரெட் உள்ளிட்ட எந்தவொரு புகையிலை நிரப்பப்பட்ட சுருட்டுகளையும் புகைக்க வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது; அதுமட்டுமின்றி, மின் சிகரெட்டுகளை புகைப்பதற்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வயதினருக்கு புகையிலை சிகரெட், மூலிகை சிகரெட், மின் சிகரெட் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் புகைத்தடை சட்டத்தின்படி, அடுத்த பத்தாண்டுகளில் 28 வயதுக்கு உட்பட்டோரும், அடுத்த 20 ஆண்டுகளில் 38 வயதுக்கு உட்பட்டோரும் புகைப்பிடிக்க இயலாது. இப்படியாக அடுத்த 6 அல்லது 7 பத்தாண்டுகளில் பிரிட்டனில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் ஒற்றை இலக்க விழுக்காட்டில் குறைந்து விடும். சிகரெட் பயன்பாட்டால் மக்களுக்கு ஏற்படும் தடுக்கக் கூடிய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவிலும் இதே போன்ற சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை இருப்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இன்னும் கேட்டால் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பிரிட்டனை விட மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியா தான் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 26.70 கோடி பேர், அதாவது இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். நேரடியாக புகைப் பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 13.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மற்றவர்கள் சிகரெட் புகைத்து வெளிவிடும் புகையை சுவாசிப்பதால் உயிரிழப்பவர்களையும் சேர்த்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 23 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 74,000 பேர் உயிரிழக்கின்றனர். இது இங்கிலாந்தின் மக்கள்தொகையான 6 கோடியில் 0.12% மட்டும் தான். ஆனால், இந்தியாவில் சிகரெட் பயன்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கையான 23 கோடி, இந்தியாவின் இன்றைய மக்கள்தொகையான 147 கோடியில் 0.157% ஆகும். சிகரெட் பயன்பாட்டால் இங்கிலாந்தை விட இந்தியாவில் அதிக விழுக்காட்டினர் உயிரிழக்கும் நிலையில், கிரேட் பிரிட்டனை பின்பற்றி இந்தியாவிலும் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் மின் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிப்பது தான் சரியான செயலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாடு தான் புற்றுநோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய் உயிரிழப்புகளில் 30 விழுக்காட்டுக்கு புகையிலைப் பயன்பாடு தான் காரணமாக உள்ளது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவில் இந்த நிலைமை இன்னும் மோசமான உள்ளது. இந்தியாவில் 40 முதல் 50% புற்றுநோய் பாதிப்புக்கு புகையிலைப் பயன்பாடு தான் காரணமாக உள்ளது.
இந்தியாவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோயால் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1300 பேர் வீதம் ஆண்டுக்கு 4.74 லட்சம் பேர் இறக்கின்றனர். இது இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழக்கும் 9.30 லட்சம் பேரில் 51% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டால் மட்டும் வாய்ப் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் என 12 வகையான புற்றுநோய்கள், ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease -COPD), பக்கவாதம், இதய நோய்கள், மலட்டுத் தன்மை, நீரிழிவு நோய், கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட 100&க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டியது எவ்வளவு அவசியமானது என்பதை தங்களால் அறிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் சிகரெட் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி நேரடியாகவும், பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் வாயிலாகவும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அமைச்சராக 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில் சிகரெட் பயன்பாட்டின் தீமைகளை கருத்தில் கொண்டு தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்கள் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
அதுமட்டுமின்றி மெல்லும் புகையிலைப் பொருள்கள், குட்கா ஆகியவற்றை தடை செய்யும் நோக்குடன் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் (விளம்பரத் தடை மற்றும் வணிகம், உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை முறைப்படுத்துதல்) சட்டம் -2003ஐ (Cigarettes and Other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act, 2003) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினேன். அதன் பயனாக இந்தியாவில் 24 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் குட்கா தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தங்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு, தங்களின் ஆட்சியில் புகையிலைப் பொருள்களின் உறைகள் மீது அச்சிடப்படும் எச்சரிக்கைப் படங்களின் அளவு 40 விழுக்காட்டில் இருந்து 85 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சிகரெட் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அவற்றின் மீதான வரிகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் தான் என்றாலும் கூட, போதுமானவையல்ல. பிரிட்டனைப் பின்பற்றி இந்தியாவிலும் 2009&ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் புகைக்க தடை விதிப்பது தான் மிகச்சரியான மற்றும் இந்தியாவிற்கு தேவையான நடவடிக்கையாக இருக்கும்.
உலகம் முழுவதுமே சிகரெட் புகைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. இதற்கான முதல் முயற்சியை நியூசிலாந்து நாடு தான் தொடங்கியது. 2009 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை 2022&ஆம் ஆண்டில் நியூசிலாந்து நிறைவேற்றியது. அந்த சட்டம் 2024&ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், 2023&ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் ஈர்க்கப்பட்ட உலகின் பல நாடுகள் அதே போன்ற சட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.
நியூசிலாந்து நாட்டுக்குப் பிறகு முதல் நாடாக மாலத்தீவு தான் இது போன்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மாலத்தீவில் 2007&ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவதாக கிரேட் பிரிட்டனில் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கனடாவிலும், அமெரிக்காவின் ஹவாய், மாசாசூசெட்ஸ் மாகாணங்களிலும் 2009&ஆம் ஆண்டிலும், அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் புகைப்பிடிப்பதற்கு தடை விதிப்பதற்கான சட்ட முன்வரைவு அவற்றின் சட்டமியற்றும் அவைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறும் போது அந்த நாடுகள்/ மாகாணங்களிலும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுவது உறுதியாகும்.
இந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைய வேண்டும் என்பது தான் நலவாழ்வில் அக்கறை கொண்ட அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில், இன்றைய நிலையில், 2009&ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் புகையிலை சிகரெட், மின் சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான சிகரெட்டுகளையும் புகைப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
