ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேசியிருக்கிறாரா? இல்லை. திமுக மீது ‘பொய் வழக்குகள்’ போடுவதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார்.

தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை போராட்டத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அதில் அவர் நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்து இரட்டை அர்த்தம் கொண்டதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவிரி நீர் பிரச்சினையை முன்னிறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது விமர்சனம் மேற்கொண்டார். “ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்கவில்லை. ஆனால் இதுகுறித்து முதலமைச்சர் வாய் திறந்து பேசியிருக்கிறாரா? இல்லை. திமுக மீது ‘பொய் வழக்குகள்’ போடுவதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார்,” என்று அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் “த்ரிஷா… த்ரிஷா…” என்று முழக்கமிட்டனர்.

அதையடுத்து சிறிது நேரம் இடைநிறுத்தி புன்னகைத்த உதயநிதி, “தண்ணீர் வேறு எங்காவது சென்றதா இல்லையா என்பது தெரியாது; ஆனால் அங்கே போய்ச் சேர வேண்டும்” என்று கூறிவிட்டு, பின்னர் தாம் காவிரி நீரைத்தான் குறிப்பிட்டதாக விளக்கம் அளித்தார். இந்தக் கருத்தை பலரும் நடிகை த்ரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்ட இரட்டை அர்த்த பேச்சாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்த பேச்சு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் இதற்கு பதில் அளித்த த.வெ.க எம்.எல்.ஏ ரேவந்த் சரண், “யாரைப் பற்றியும் இத்தகைய அருவருப்பான கருத்துகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது” இந்த சம்பவம் தி.மு.கவின் அரசியல் கலாச்சாரத்தையும், அதன் தரச்சரிவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. காவிரி போராட்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காக “மலிவான தூண்டுதல் அரசியலை” தி.மு.க கையில் எடுத்துள்ளது. 

இப்படிப்பட்ட அகங்காரமும், அநாகரிகமான செயல்பாடுகளும் தொடர்ந்தால், தி.மு.க.வின் மக்கள் ஆதரவு மேலும் குறையும். அதனால்தான் தமிழக மக்கள் உங்களை நிராகரித்து இன்று இருக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளனர். அறிவாலயத்தில் ஏற்கனவே மிகவும் தாழ்ந்த அரசியல் தரத்தைக் கூட இது மேலும் கீழிறக்கியுள்ளது,” என்று ரேவந்த் சரண் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க.வும் உதயநிதி ஸ்டாலினின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்தக் கருத்து “அருவருப்பானது, ஆபாசமானது, நாகரிகமற்றது, வெட்கக்கேடானது” என்று கட்சி தெரிவித்துள்ளது.
மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மவுனம் காத்திருப்பதையும் விமர்சித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதனால் முதலமைச்சர் விஜயின் நம்பகத்தன்மை மேலும் உயரும் என்றும் அவர் கூறினார்.

மேலும், உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், த.வெ.க மகளிர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், த.வெ.க சார்பில் தேசிய மகளிர் அணியில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.