கைது செய்ய பட்டவர்

கோவை,
கோவை தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மகபூப் என்பவரின் மகன் முகமது ரஷீத் (37). தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் உக்கடம் பள்ளி வீதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டை வாங்கி வசித்து வந்தார்.முகமது ரஷீத் விலைக்கு வாங்கிய வீட்டின் பத்திரத்தையும் சையது இப்ராஹிமின் வீட்டின் பத்திரத்தையும், சித்திக் அலி என்பவர் கோவை ஒலம்பஸில் உள்ள பைனான்ஸில் அடகு வைத்திருந்தார். சித்திக் அலி வெளிநாட்டிற்கு சென்று இருந்ததால் அந்த பத்திரத்தை திருப்புவதற்காக அவரது அண்ணன் சையது இப்ராஹிம் மூலம் திருப்ப சொன்னார். அதற்காக 2017-ஆம் ஆண்டு முகமது ரஷீத் 7 லட்ச ரூபாயை சையது இப்ராஹிமிடம் கொடுத்துள்ளார். ஆனால் சையது இப்ராகிம் அடமானத்திலிருந்து பத்திரத்தை மீட்டு தராமல் இருந்துள்ளார். அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்த சித்திக் அலி பத்திரத்தை மீட்டு முகமது ரஷீத்திடம் கொடுத்துள்ளார். சையது இப்ராஹிமிடம் கொடுத்த பணத்தை முகமது ரஷீத் கேட்ட போது அவர் தருவதாக சொல்லி தொடர்ந்து ஏமாற்றி வந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் சையது இப்ராஹிம் கேரளாவில் நெய் வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை ரஷீத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் .இதை பார்த்து ஆத்திரம் அடைந்த சையது இப்ராஹிம் தான் ஏற்கனவே தர வேண்டிய பணத்தை தந்து விடுவதாக கூறி கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் முகமது ரஷீத்தை வரவைத்து சமாதானம் பேசியுள்ளார். தொடர்ந்து கடந்த வாரம் புதன்கிழமை 1 லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறி பொள்ளாச்சி சாலை குறிச்சி குளக்கரை பகுதிக்கு முகமது ரஷீத்தை வரச் சொல்லியுள்ளார். இதை நம்பிய முகமது ரஷீத் அங்கு சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே நீல நிற கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் சையது இப்ராகிம் தனது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். அதே சமயத்தில் காரில் இருந்து இறங்கிய இரண்டு நபர்கள் முகமது ரஷீத்தை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் பின்பக்க சீட்டில் ஏற்றியுள்ளனர். சையது இப்ராஹிமும் காரில் ஏறிக்கொண்டார்.முகமது ரஷீத்தை சரமாரியாக தாக்கி அவரது கண்களை துணியால் கட்டியுள்ளனர். கிணத்துக்கடவு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு முகமது ரஷீத்தை கடத்திச் சென்ற கும்பல் அங்கு வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர் .பின்னர் முகமது ரஷீத்திடம் கோர்ட்டில் உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்று கூறி அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து முகமது ரஷீத் வைத்திருந்த இரண்டு செல்போன்கள், டேப் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை பறித்துக் கொண்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்றது. படு காயங்களுடன் இருந்த முகமது ரஷீத் அங்கிருந்து நடந்து வந்து அப்பகுதியில் உள்ளவரிடம் பண உதவி பெற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் முகமது ரஷீத் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகமது ரஷீத்தை கடத்திச் சென்று தாக்கிய கும்பலை போலீசார் தேடி வந்தனர். பின்னர் அந்த கும்பல் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது அங்கு இருந்த கும்பல் திண்டுக்கல்லுக்கு தப்பி சென்று விட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து போத்தனூர் போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த கோவை உக்கடம் பள்ளி வீதி பகுதியைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் என்பவரின் மகன் சையது இப்ராஹிம் (45) திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் தாஜ்தீன் (23) திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் முகமது அப்பாஸ்( 25 ), திண்டுக்கல் மாவட்டம் சில பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் அழகர்சாமி (22), கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரின் மகன் முகமது ஆகில்(29), கோவை புல்லுக்காடு ஹவுசங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரின் மகன் அப்சல்தீன் (29), திண்டுக்கல் மாவட்டம் ஒய் எம் பட்டியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் கார்த்திக் (19) ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தல் கும்பல் முகமது ரசீதை கடத்த பயன்படுத்திய கார், பைக், பறித்து சென்ற செல்போன்கள் ,பணம் உள்ளிட்ட பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சையது இப்ராஹிம் மீது ஏற்கனவே கோவை மாநகர குற்றப்பிரிவு , ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply